×

மோடியின் பத்தாண்டு ஆட்சியில் ஏற்பட்ட வேதனை: கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் குடும்பங்கள்

* ‘டிஜிட்டல்’ வந்ததால் சேமிப்பு பழக்கம் போச்சு

* அன்றாட வாழ்க்கையே திண்டாட்டமாச்சு

* 47 ஆண்டுகளில் இல்லாத மோசமான நிலை

கடந்த 10 ஆண்டு பாஜ ஆட்சியில், 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டு விட்டார்கள் என பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கூட்டத்துக்கு கூட்டம் கூறி வருகின்றனர். 2 நாட்கள் முன்பு நடந்த பிரசார கூட்டத்தில் கூட, வறுமையை ஒழிப்பதுதான் எங்கள் நோக்கமாக உள்ளது என மோடி சூளுரைத்துள்ளார். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் இதற்கு நேர் மாறாக நடந்துள்ளதை, மக்களின் கடன் சுமை தொடர்பாக சமீபத்தில் வெளியான புள்ளி விவரம் மூலம் அறிய முடிகிறது.

நிதிச்சேவை நிறுவனமான மோதிலால் ஓஸ்வால் நிறுவனம் வெளியிட்டுள்ள அந்த ஆய்வறிக்கையில், கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த கடந்த நிதியாண்டின் மூன்றாம் காலாண்டின்படி, மக்கள் கடன் சுமை நாட்டின் ஜிடிபியில் 40 சதவீதம் அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளது. இதுபோல் சேமிப்பும் ஜிடிபியில் 5 சதவீதமாக குறைந்து விட்டது என்பது மற்றொரு அதிர்ச்சி விவரத்தையும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

ஒன்றிய பாஜ அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, பொருளாதாரத்தை சீர்படுத்துவதாகவும், கருப்புப் பணத்தை ஒழிப்பதாகவும் கூறி பண மதிப்பு நீக்கம் உள்ளிட்ட சில நடவடிக்கைகளை மேற்கொண்டது. அப்போது பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டை மாற்ற வங்கிகளில் கால் கடுக்க காத்திருந்த மக்களின் அவல நிலை, இன்னும் தீர்ந்ததாகத் தெரிய வில்லை. காஸ் விலையேற்றம், பெட்ரோல் விலையேற்றம், அதன் தொடர்ச்சியாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு என எல்லாமே உச்சம் தொட்டுக் கொண்டிருக்க, மக்களின் பொருளாதார நிலை கீழ் நோக்கி சரியத் தொடங்கி விட்டது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், மக்களின் சேமிப்பு 2022-23 நிதியாண்டில் 5.1 சதவீதமாக சரிந்து விட்டது என குறிப்பிட்டிருந்தது. இது 47 ஆண்டுகளில் இல்லாத சரிவாகும். ஆனால், வசதியை பெருக்கிக் கொள்ள முதலீடு செய்வதற்காக மக்கள் கடன் வாங்கியதாகவும், அதனால் சேமிப்பு குறைந்ததாகவும், இது நிதிச்சுமையல்ல எனவும் நிதியமைச்சகம் மழுப்பியது. இதன் பிறகு, கடந்த பிப்ரவரியில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட 2022-23 நிதியாண்டுக்கான மதிப்பீட்டிலும், மக்களின் நிகர சேமிப்பு ஜிடிபியில் 5.3 சதவீதமாகத்தான் இருந்தது.

இதுவும் 47 ஆண்டுகளில் இல்லாத சரிவுதான். 2011-12 மற்றும் 2019-20 நிதியாண்டுகளுக்கிடையே சேமிப்பு ஜிடிபியில் சராசரியாக 7.6 சதவீதமாக இருந்தது என ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது. இதை விட மிக மோசமான நிலைதான் தற்போது ஏற்பட்டுள்ளது. இதுபோல், கடந்த டிசம்பர் மாத நிலவரத்தின்படி, மக்களின் கடன் சுமை ஜிடிபியில் 40 சதவீதமாக உள்ளது தெரிய வந்துள்ளது. வங்கிகள் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின் அடிப்படையில் பார்த்தால், உத்தரவாதமின்றி வழங்கப்படும் தனி நபர் கடன்கள் காரணமாக, மக்களின் கடன் சுமை வெகுவாக அதிகரித்து விட்டதை அறிய முடிகிறது.

இதுபோல், விவசாயிகள், வர்த்தகர்கள் பலரும் கடன் சுமையில் சிக்கி தவிப்பதை மோதிலால் ஓஸ்வால் நிறுவனம் சுட்டிக் காட்டியுள்ளது. குடும்ப வருவாய் குறைவாகவே நீடிப்பதால், சேமிப்பு மிக குறைந்த பட்ச அளவாக, அதாவது ஜிடியில் 5 சதவீதமாக உள்ளது. அதிலும், நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களிலும் சேமிப்பு ஏறக்குறைய 5 சதவீதம் என்ற அளவில்தான் காணப்படுகிறது. ஆண்டு முழுக்க கருத்தில் கொண்டால் கூட இந்த விகிதம் 5 முதல் 5.5 சதவீதமாக இருக்கலாம்.

இது பெரிய முன்னேற்றம் என்று கருத முடியாது என ஆய்வறிக்கை மூலம் கணிக்க முடிகிறது. கடந்த 2022-23 நிதியாண்டில் சேமிப்பு அதிகம் காணப்பட்டாலும், தொடரும் நிதி நெருக்கடி காரணமாக மக்கள் சேமிக்க முடியாமல் திண்டாடுகின்றனர். கடன் வாங்குவது 2022-23 நிதியாண்டில் ஜிடிபியில் 5.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது நாடு சுதந்திரம் அடைந்த பிறகு எட்டியுள்ள அதிகபட்ச அளவாக கருதப்படுகிறது. இதுபோல் ரியல் எஸ்டேட், தங்கம் போன்றவற்றில் முதலீடு செய்வதும் முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் குறைவுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்த பிறகு மக்களின் சேமிப்பு வெகுவாக குறைந்து விட்டது. யுபிஐ மூலம் சுலபமாக மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனை முறைகளால் பணம் எவ்வளவு செலவு செய்கிறோம் என்பதையே மக்கள் அறிவதில்லை. இதுவும் சேமிப்பு குறைய முக்கிய காரணமாக கருதப்படுகிறது. மக்களின் சேமிப்பு குறைந்து, கடன் சுமையும் வெகுவாக அதிகரித்துள்ள நிலையில், வறுமையில் இருந்து மக்களை மீட்டு விட்டதாக மோடி அரசு கூறுவது எந்த வகையில் ஏற்புடையது என கேள்வி எழுப்புகின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

* கொரானா கால நெருக்கடி மீண்டும் வந்த அவலம்
2022-23 நிதியாண்டில் மக்களின் கடன் சுமை ஜிடிபியில் 38 சதவீதமாக உயர்ந்துள்ளது என ரிசர்வ் வங்கி வெளியிட்ட மதிப்பீட்டு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதற்கு முன்பு கொரோனா பரவலின்போது 2020-21 நிதியாண்டில் கடன் சுமை ஜிடிபியில் 39.1 சதவீதமாக இருந்தது. கொரோனா பேரிடரின்போது ஏராளமானோர் வேலை இழந்து, வருவாய் இன்றி திண்டாடினர்.

அப்போதிருந்த கடன் நெருக்கடியும், மோசமான நிதி நிலையும் இப்போதும் நீடிக்கிறது என்றால் இத்தனை ஆண்டு காலமாக மக்கள் நிலை முன்னேற்றம் அடைய பாஜ என்ன சாதித்து விட்டது என்ற கேள்வி எழுகிறது. தனியார் நிறுவன ஆய்வறிக்கையில் கடன் சுமை 40 சதவீதமாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

* வேலையின்றி திண்டாடும் இளைஞர்கள்
மக்களின் கடன் சுமை அதிகரிக்க வேலையில்லா திண்டாட்டமும் முக்கிய காரணமாக உள்ளது. தகுந்த வேலை கிடைக்காமல் உழைக்கும் வயதை அடைந்த இளைஞர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு 1.2 கோடி வீதம் அதிகரித்து வருகிறது.

* பொருளாதாரத்துக்கு ஆபத்து
மக்களின் கடன் சுமை அதிகரிப்பு குறித்து விமர்சித்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ‘‘இது இந்திய பொருளாதாரத்துக்கான எச்சரிக்கை மணி. ஆனால், மோடி இதனை கண்டு கொண்டதாக தெரியவில்லை. அவரது ஆட்சியில் இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம், விலை வாசி உயர்வு, சமத்துவமின்மை ஆகியவை அதிகரித்து விட்டது. மக்கள் பாடுபட்டு சேர்த்து வைத்த நகைகளை கூட அடகு வைத்து கடன் வாங்க வேண்டிய அவல நிலைக்கு வந்து விட்டனர்’’ என்றார்.

The post மோடியின் பத்தாண்டு ஆட்சியில் ஏற்பட்ட வேதனை: கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் குடும்பங்கள் appeared first on Dinakaran.

Tags : Modi ,BJP ,Dinakaran ,
× RELATED மத அடிப்படையிலான பட்ஜெட், கல்வி,...